கடலூர் தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் முன்னாள் மாணவர் அரங்கில் முத்தமிழ் மன்றம் தொடக்கவிழா குத்துவிளக்கு ஏற்றி இனிதே தொடங்கப்பட்டது. இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி ச.முகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் M. சுவாமிநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் மற்றும் கணினித்துறைத்தலைவர் முனைவர் ம.அருமைசெல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கடலூர் & பெரியார் அரசு கலைக்கல்லூரி & தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் (ஓய்வு) முனைவர் ந. பாஸ்கரன் அவர்கள் “இலக்கியங்களில் உளவியல்” என்ற பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார்.
சிந்தனைதான் உள்ளம் என்பதை சங்க இலக்கியங்கள் & திருக்குறள் & கம்பராமாயணம் போன்ற இலக்கிய நூல்களிலிருந்து உளவியல் சிந்தனைகளை எடுத்துக்கூறினார். இன்று படித்தவர்களிடம் புத்தகம் இல்லை. அவன்வேறு கல்வி வேறு என்று நினைக்கிறான். அன்று இருந்த வாழ்க்கைதான் இன்றும் உள்ளது. படிப்பதுவேறு வாழ்க்கைவேறு என்று இல்லாமல் கற்க நிற்க என்பதற்கு ஏற்ப வாழவேண்டும் என்று மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார்.
இவ்விழாவில் முத்தமிழ் மன்றப் பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இளங்கலை முதலாமாண்டு மாணவி P. ஜெயஸ்ரீ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவானது தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம. வனத்தையன் அவர்களின் நெறிகாட்டுதலில் முனைவர் அ.அன்னம்மாள் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் ஒத்துழைப்போடு இனிதே நிறைவுற்றது.